பேல்பூரி விற்கிறவனிடம் கேட்டதும்,தன் முன் இருக்கிற விதவிதமான டப்பாக்களில் இருந்து கலர் கலரான பொடிகளில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து கலந்து கொடுப்பது போல் படம் எடுத்தால்? அது சினிமாவை கிண்டல் செய்து எடுத்த ‘தமிழ்படம்’ போலவே இருக்கும். மக்கள் கிண்டல் என்று தெரிந்து ‘தமிழ்படத்தை’ பார்த்து ரசித்தார்கள். ஆனால் இந்த வகையான படத்தை எடுப்பவர்கள் கிண்டல் என்று தெரியாமல் படு ‘சீரியஸாக’ எடுக்கிறார்கள் போல!
வேட்டை, லிங்குசாமியின் டெம்ப்ளேட் இட்லித்தட்டில் வார்த்து எடுக்கப்பட்ட இன்னொரு இட்லி.
சின்னவயதில் மாதவனும் ஆர்யாவும் பட்டம் விட இன்னொரு சிறுவன் அதை அறுத்துவிட மாதவன் பயந்து அடிவாங்கிக் கொண்டு வருகிறார். ஆனால் சின்ன வயது ஆர்யா அவருக்கு வக்காலத்து வாங்கி போய் அடி கொடுக்கிறார். அப்போது தீபாவளியாம். ஒரு கிராஃபிக்ஸ் ராக்கெட் மேலே போய் வெடிக்கிறது, உடனே ஆர்யமாதவன் பெரியவர்களாக வளர்ந்து ‘தேரடி வீதியில் தேவதை வந்தா..’என்று இன்னொரு வெர்ஷனில் ஆடிப் பாடுகிறார்கள்.(பாட்டு நினைவில் இல்லை!)
இந்த மாதிரி திரைக்கதை உத்திகளை ABC எல்லா சென்டரின் ரசிகர்களும் எழுதிவிடமுடியும். இதுக்கு டைரக்டராக இருக்கணும்னு அவசியமில்லை. ஆட்டுக்கல்லாகவோ, வெட் கிரைண்டராகவோ இருந்தால் போதும் அரைச்சுத் தள்ளிவிட.
அதிக வெண்ணை தின்று ஊட்டமாய் வளர்ந்த கண்ணன் ஸாரி...மாதவன் திரையை முழுதாய் அடைத்துக்கொண்டு நிற்கிறார். இன்னும் கொஞ்சம் நாள் கழித்து அதைத் தாண்டி சுவரிலும் தெரிவார் போல. ஜிம் பாடியோடு தம்பி ஆர்யா!
மாதவன் இந்த ரோலில் கரெக்டாக பொருந்துகிறார். எப்படி நடிக்க சம்மதித்தார் என்று தெரியவில்லை. உண்மையில் இது சப்பாணி வேஷம். பாதிக்கு மேலே வீரம் வந்து வசனம் பேசி கொஞ்சம் ஆக்ஸன் பண்ண முயற்சி செய்கையில் நமக்கு அப்போதும் அவர் சப்பாணியாகவே தெரிகிறார். கமல் படங்களில் நடித்து நடித்து டம்மி பீஸாகவே கடைசியில் ஆகிவிட்டார் மாதவன்.
ஒரு ஹூரோயின் முற்றல் சமீரா ரெட்டி. குண்டு மாதவனுக்கு சரியான ஜோடிதான். சமீராவுக்கு தமிழ்,தெலுங்கு,கன்னடம் எல்லாமே ஒண்ணுதான் போல. உதட்டசைவைப் பொறுத்தவரை மாறுதலே இல்லை. டயலாக் பேசும் போது எதையோ மெல்லுகிற பாவனை!
அடுத்து அமலா பாலுக்கு நடிப்பென்றால் கிலோ என்ன விலைதான்! உதட்டோடு உதடு ரோசி (உரசிதான்...அதில் ஒரு சாதாரண கிக் கூட இல்லை) அதுக்கு பேர் லிப் டூ லிப்பாம். சில நேரங்களில் அவரைப் பார்த்தால் கோரமாகவும் தெரிகிறார். உடம்பும் ஒன்றும் பிரமாதமில்லை அதை காட்டி நடிக்க. மைனா உயரப் பறந்ததில் வந்த குறுகிய கால புகழ்தான் அம்மணியிடம். ஆனால் அந்த கண்கள்...வாவ்! அதனால் அதை மட்டும் கூகுளில் பார்த்துக்கொள்ளவும்.
நாம் எதிர்பார்த்த மாதிரி ஆர்யமாதவனின் போலீஸ் அப்பா மண்டையைப் போட, (ட்விஸ்ட்! வில்லன் கொல்லலை. சாதாரண மரணம் தான்) ஆர்யா அண்ணன் மாதவனை போலீஸாக ஆகச் சொல்கிறார். ஏனெனில் ஆர்யா படிப்பில் சுமார்தானாம். மாதவன் பயந்து நடுங்க, ஒரு ஐடியா கொடுக்கிறார். (ட்விஸ்ட்! மாதவன் போலீஸ்தான் ஆனால் ஆக்ஸனெல்லாம் ஆர்யா).
பாக்யராஜ்-சில்க் ஸ்மிதா நடித்த அவசர போலீஸ் நினைவுக்கு வருதா? அதேதான்! கடத்தப்பட்ட சிறுமியை மீட்க நான் தனியாக போறேன் என்று ஸ்டேஷனைவிட்டு மாதவன் கிளம்ப, ஆர்யா ‘அந்நியன்’ விக்ரம் மாதிரி உடையில் அங்கே போய் வேலையை முடித்து வைத்திருக்க, புரமோஷன் வாங்கிக்க வேண்டியது மாதவனின் வேலை. இப்படியே போய்க்கிட்டிருக்கு! மாதவன் ஒரு டெரர்ராக புகழ்பெறுகிறார் மக்களிடத்தில்!
சமீரா ரெட்டியை ஆர்யா தன் அண்ணனுக்காக பொண்ணு பார்த்து ஒகே சொல்ல, இலவச இணைப்பாக அங்கே இருக்கும் தங்கை அமலா பாலை ஜூட் விடுகிறார்! ஒரு நாள் ஆர்யா வந்தது தெரியாமல் பாத்ரூமில் இருந்து வெளியே வந்து டவலை அவிழ்த்து க(கா)ட்டிவிட்டு சிறிது நேரத்துக்குப்பிறகு அய்யோ பார்த்து விட்டானே என்று அலறுகிறார் அமலா பால். (ட்வி....! ஆர்யா போனபிறகுதான் அது அவருக்குத் தெரியவருகிறது)
ஆர்யமாதவனால் பாதிக்கப்பட்ட வில்லன், குண்டு மாதவனை அடக்குவதற்காக, அவன் தம்பி ஆர்யாவை தூக்கிட்டு வாங்கடா என்கிறார். (ட்வி....! இத உங்களுக்கு விளக்க வேற செய்யணுமா? ஆர்யாதானே உண்மையில டெர்ரர்! இது வில்லனுக்கு தெரியாதே!). ஆர்யா அவர்களை செம்மையாக உதைத்து அனுப்புகிறார். இடைவேளை!
இடைவேளைக்கு பிறகு உண்மையை கண்டு பிடித்துவிட்டார் தூத்துக்குடியில் வளர்ந்த ஹிந்தி வில்லன். இப்போ குண்டு மாதவனை அடிங்கடா என்று ஆட்களை அனுப்புகிறார். முழங்காலுக்கு கீழே நொறுக்கி அடி பின்னி எடுத்துவிடுகிறார்கள். ஆர்யா ஆஸ்பத்திரிக்கு வந்து....(ட்வி....! இப்போதான் தொடர்ச்சியாய் காமெடி காட்சிகள் ஆரம்பம்!) நீ தைரியமானவனா ஆவேன்னுதான் உன்னை போலீஸ் வேலைக்கு நான் அனுப்பிச்சேன் என்கிறார்.
அதற்குப் பிறகு வீல் சேரில் மாதவன். தள்ளிக் கொண்டு ஆர்யா போகும்போது வில்லனின் ஆட்கள் வந்து ஆர்யாவை அடிக்க, ஆர்யா அண்ணன் வீல் சேரில் இருந்து எழுந்து வருவார் என்பதற்காகவே அவர்களிடம் அடிவாங்கி ரத்தம் துப்பி அப்பப்ப அண்ணன் வர்றானான்னு மட்டும் தலையை தூக்கிப் பார்க்கிறார். மாதவனுக்கு திடீர்னு நடிக்க வாய்ப்பு வந்து விட்டது இல்லையா? வீரம் வந்து எழுந்து வர்றாரு பாருங்க...தியேட்டர் குலுங்கி குலுங்கி சிரிக்குது. முன்வரிசைல இருக்கிறவர்கள் நக்கல் பண்ணி கலாய்ச்சி எடுத்துவிட்டார்கள்! அத்தனை நாடகத்தனம்!
அதுக்குப் பிறகு, குண்டு மாதவன் தம்பி ஆர்யாவோடு ஜாகிங் போய், எக்ஸசைஸ் செய்து, தண்டால் பஸ்கி எடுத்து,ஸிட் அப்,ஸ்டாண்ட் அப் எல்லாம் பண்ணி மறுபடி போலீஸ் டிரஸ்ஸை மாட்டி-இன்னும் குண்டாக-வந்து நிற்கிறார். இப்போது அவர் பழைய மாதவன் இல்லே வீரமாதவன். முகம் மட்டும் சாக்லேட் பாய் பாவனையில் கன்னக்குழியோடு சிரிப்பு. அதே சூட்டோட ஒரு ரவுடியை போட்டுத் தள்ள ஏற்பாடு செய்கிறார். (ட்விஸ்ட்! இதை விளக்க முடியாது. திரைக்கு வந்து சில மாதங்களில் பார்க்கலாம்!)
சமீரா ரெட்டி தன் கொழுந்தனாருக்கு தங்கையை திருமணம் செய்து கொடுக்க மாட்டேன் என்கிறார். அவர்தான் மோட்டார் பைக்கில் போகிற ஸிட்டி பருத்திவீரனாச்சே! வேலை கிடையாதே! ஒரு அமெரிக்க காமெடி மாப்பிள்ளை காரெக்டரை உருவாக்கி கொஞ்ச நேரம் படத்தை எல்லாரும் சேர்ந்து கரகாட்ட கோஷ்டி காரைத் தள்ளுகிற மாதிரி தள்ளுகிறார்கள். (காரில் அமர்ந்திருப்பது நாம்தான்!)
கல்யாணத்தன்று அமெரிக்க மாப்பிள்ளை (விரட்டியதால்) ஓடிப் போனதும் அமலா பாலை ஆர்யாவே திருமணம் செய்து கொள்கிறார். உடனே கவர்ச்சிப் பப்ப பப்ப பாட்டு. ஐயகோ! சிம்ரனின் இடுப்பை கண்டு களித்த தமிழ்ச்சமுதாயத்துக்கு இதெல்லாம் இடுப்பென்று காணவேண்டியிருக்கிறதே!
பின்னர் வில்லனின் ஒரு ஆளை ஆர்யமாதவன் மடக்கிப் பிடிக்க (இங்கயும் ஒரு ட்வி.....!) கோபம் வந்த வில்லன் இவர்கள் வீட்டுக்கே வந்து ‘மாசமா’ இருக்கிற (சென்டிமென்ட்!) சமீரா ரெட்டியை கொல்லவும் அங்கே வருகிற அமலாபாலை கெடுக்கவும் முயல ஆர்யமாதவன் வந்து சேர்ந்து க்ளைமாக்ஸ்.
இதில் மாதவனை மேலும் டம்மி பீஸாக்கி கிட்டத்தட்ட ‘தமிழ்சினிமாவில் ஹீரோவோடு வருகிற அல்லக்கை’ பேசுகிற வசனத்தை கொடுத்துவிட்டார்கள். ‘அவன் யாரு தெரியுமில்ல...வருவான்டா வருவான்’ என்கிறார் ஆர்யாவைப் புகழ்ந்து தள்ளி! இதற்குள் நாம் சீட்டில் முன்னாடி நகர்ந்து, பின்னாடி சாய்ந்து, எல்லா பக்கமும் சரிந்து உட்கார்ந்து பார்த்தாயிற்று!
கடைசியாக வில்லன் மாட்டிக்கிட்டதும் ஒரு ட்விஸ்ட் (இதான் கட்டக் கடைசி!). வில்லனை கொல்லவேண்டும் என்று ஆர்யா சொல்ல, வேணாம் கோர்ட்டில் ஒப்படைத்துவிடலாம் என்கிறார் மாதவன். துப்பாக்கியை தரையில் சுழற்றி விட்டு அது வில்லனைப் பார்த்து நின்றால் அவன் காலி! ஓகேவா? என்று காமெடி பண்ணுகிறார்கள். நமக்கு நவதுவாரங்களும் எரிகிறது!
வில்லனை மாதவன் துப்பாக்கியால் சுட, அட...! அப்போதும் தீபாவளியோ? ஒன்றல்ல மூணு கிராஃபிக்ஸ் ராக்கெட் மேலே பறந்து போய் வெடிக்கிறது. திரையில்...தோன்றுவது A film by lingusamy.
இன்டர்வெலுக்கு பிறகு என் வரிசையில் இருந்த மூணு ஆட்களை வேறு காணோம்! அரைத்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி எடுக்க எதுக்கு டைரக்டர் இத்தனை அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ்? ஏனெனில் அவர்கள் ட்விஸ்டுகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் இந்த ட்விஸ்டுகள் லிங்குசாமியின் டெம்ப்ளேட்டிலேயே இருக்கின்றன. ஜனங்களாலேயே அதைக் கண்டுபிடிக்க முடிகிறது.
பொருளாதார அடிப்படையில் சரி ,இயக்குநருக்கான சுதந்திரத்தின் அடிப்படையிலும் சரி...ஒரு நல்ல நிலமையில் இருக்கிற லிங்குசாமியாலேயே புதுசாக ஏதும் செய்ய முடியவில்லை என்றால் அறிமுக இயக்குநர்களால் எப்படி யோசிக்க இயலும்? (மாசக் கணக்கா அப்டி என்னதான் யோசிப்பாங்யளோ?)
அமலா பாலுக்கும் ஆர்யாவுக்கும் காதல் என்று சொல்ல சில நல்ல காட்சிகளை பாக்குறவனும் மனசில் வாங்கிக்கிற மாதிரி,உணர்கிற மாதிரி, படைக்கக் கூடாதா? இவ்ளோ செலவு பண்ணி, பில்டப் கொடுத்து, பப்ப பப்ப என்றெல்லாம் பாட்டு போட்டு கடைசியில் பப்பரப்பாய்ங்னு படம் எடுத்தால் எப்படி?
சிப்பிக்குள் முத்து,சலங்கை ஒலி போன்ற படங்களை எடுத்த டைரக்டர் விஸ்வநாத் சொல்வதுண்டு. ‘ஒரு யோசனை அல்லது ஒரு சம்பவம் மனதில் விழுந்து அதை மனம் உருட்டி உருட்டி பலவிதமாக யோசனை செய்து நாள்கணக்கில் அதன் தாக்கத்தை உணர்ந்து பின்னர் ஒரு நாள் பேப்பரும் கையுமாய் அமர்ந்து அதை எழுதி அதன் பின் ஷூட்டிங் செல்வது நல்லது. அது நிச்சயம் மக்களின் மனங்களை பாதிக்கும்.’என்று!
தன் மனம் எதிரே திரையில் விழுகிற காட்சிகளில் எங்கேயாவது தொடர்புகொள்ள முடிந்தால் ரசிகர்கள் உச்சி மோந்து வரவேற்பார்கள். அப்படி உள்ள காட்சிகள் அதிகம் இருந்தால் வாழ்நாள் முழுதும் கொண்டாடுவார்கள். இதற்கு அர்த்தம் அது ‘ஆர்ட் ஃபிலிமா’க இருக்கணும் என்றில்லை. அப்படி என்றால் கமர்ஷியல் படங்கள் எடுப்பது மிகச் சுலபமான விஷயம் என்றாகிவிடும். அப்படித்தான் நிறைய பேர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உருப்படியான மசாலாவாக இருக்கவேண்டும்!
லிங்கு சார்! பேசாம முருகதாஸ் சார் கிட்டே (பெயர் சொன்னதும் தமிழ் உணர்வு குபுக்’னு எனக்கு பொங்குது! அதனால...) முருகனடிமை ஐயாவிடம் பாடம் கற்றுக் கொண்டு ஏழாம் அறிவு போலே ஏதாவது புதுசாக படத்துக்கு விளம்பரம் செய்ய முயலுங்களேன்! A review by chilled Beers! (இப்படி ஸ்லைடு போடுறதுதான் படத்துல என்னை பாதிச்சது!!!!)


16 comments:
//பொருளாதார அடிப்படையில் சரி ,இயக்குநருக்கான சுதந்திரத்தின் அடிப்படையிலும் சரி...ஒரு நல்ல நிலமையில் இருக்கிற லிங்குசாமியாலேயே புதுசாக ஏதும் செய்ய முடியவில்லை என்றால் அறிமுக இயக்குநர்களால் எப்படி யோசிக்க இயலும்?//
நல்லா சொன்னீங்க பாஸ்!
இதில லிங்குசாமி புத்தகவிழா ஒன்றில போய் நல்ல கதை இருந்தா என்கிட்டே வாங்கன்னு 'கதை' விட்டு எஸ்.ரா. கிட்ட நோஸ்கட் எல்லாம் வாங்கியிருக்காரு!
//இடைவேளைக்கு பிறகு உண்மையை கண்டு பிடித்துவிட்டார் தூத்துக்குடியில் வளர்ந்த ஹிந்தி வில்லன்// :-))))
அட்டகாசமான விமர்சனம் பாஸ்!
நீங்க இப்பிடி நிறைய எழுதணும்! நம்ம டைரக்டருங்க எழுத வைக்கணும்! :-)
சும்மா புகுந்து விளையாடிட்டீங்க! ஆமாம் ஆர்யமாதவன் என்றே எழுதியிருக்கீங்களே, அவர் திராவிடன் இல்லையா! (ஹி..ஹி..). பாவம், மாதவன் இனி பெரியண்ணா, அப்பா கேரக்டர்களில் தான் வரவேண்டுமா! நீங்கள் இத்தனை எழுதினாலும் படம் பார்க்கப் போகிறவர்களை தடுக்க முடியாது என்றே நினைக்கிறேன். - ஜெ.
உங்களையெல்லாம் ஒருத்தரும் திட்ட மாட்டேன்றாங்க. நான் மட்டும் இது மாதிரி முழுக் கதையையும் எழுதியிருந்தா வந்து நாலு சாத்து சாத்தியிருப்பாங்க..!
எனிவே.. விமர்சனம் படு சூடு..! தொடர்ந்து எழுதுங்கள் ஸார்..!
வணக்கம் உண்மைத்தமிழன் சார்! உங்கள் வரவால் இந்த வலைப்பூவுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கிறது.
//நான் மட்டும் இது மாதிரி முழுக் கதையையும் எழுதியிருந்தா வந்து நாலு சாத்து சாத்தியிருப்பாங்க..!//நீங்க திட்ட திட்ட திண்டுக்கல்லு...உங்களை வைய வைய வைரக்கல்லு!
நன்றி ஜீ, நன்றி ஜெ.
கொல பண்றாங்கப்பா..
a comment by MAYILAN...
விமர்சனம் சூப்பர். மற்ற விமர்சனங்களுடன் பார்க்கும்போது கொஞ்சம் வித்தியாசம். ஆனால் நல்லாயிருக்கு. தொடர்ந்து கலக்கலாக பதிவிடுங்கள்.
பார்த்தேன்... சர்தான்
nalla vimarsanam ....
Excellent review -absar
என் வலையில்;
ஜெஃப்ரி ஆர்ச்சரின் த்ரில்லர் சிறுகதை-தமிழில்
பளிச்'சென்று சொல்லிவிட்டீர்கள். ஆனாலும் உங்கள் விமர்சனத்தில் ஒரு வாசிப்பு இன்பம் இருக்கிறது.
nice...good review...bad movie
படத்தை விட உங்க விமர்சனம் நல்லா இருக்கு
Post a Comment
'அனானி'யாகவாது உங்கள் கருத்தை பதிவு செய்யுங்க! ஸ்டிரிக்டா சொல்றேன்...கமென்ட்டுக்கு மாடரேஷனே கிடையாது!